
மதுரை அருகே கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வர் மு.க. ஸ்டாலினையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில், அவருக்கு எதிராக திமுக மற்றும் அதிமுகவினர் மதுரையில் போஸ்டர்களை ஒட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
திமுக போஸ்டர்கள்:
திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், நடிகர் விஜய்யின் கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், "வாட் ப்ரோ; ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ..." என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இது, விஜய்யின் பேச்சைக் கண்டிக்கும் வகையில் அமைந்திருந்தது.
அதிமுக போஸ்டர்கள்:
அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களில், "நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை... நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் இல்லை" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது, அரசியல் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் நபர்களை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த போஸ்டர் யுத்தம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பேச்சுக்கு இரு முக்கிய கட்சிகளும் நேரடியாக எதிர்வினையாற்றி உள்ளதால், வரும் நாட்களில் அரசியல் விமர்சனங்கள் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.