பல மாவட்டங்கள் பாலைவனமாகும்! மக்களுக்கு தொடர்ந்து துரோகம் பண்றீங்களே! திமுகவை விளாசும் அன்புமணி!

Published : Aug 24, 2025, 05:37 PM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறும்படி தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Anbumani Blasts DMK on Hydrocarbon Wells in Tamil Nadu: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் திமுக மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹைட்ரோ கார்பன் கிணறுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை பாலைவனமாக மாற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என பாமக வலியுறுத்தி வரும் நிலையில் அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பம்

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனைத்தும் ஏறக்குறைய 3,000 அடி ஆழத்திற்கு அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு கிணறும் ரூ.33.75 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ. அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும்.

நிலநடுக்கம் கூட ஏற்படும்

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசு நினைத்திருந்தால் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்து, மக்கள் மனதில் இருந்து இவை குறித்த நினைவுகள் விலகிய பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் சதித் திட்டத்திற்கு திமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துள்ள துரோகம் ஆகும்.

திமுக மக்களுக்கு துரோகம்

காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும், மீத்தேன் எரிவாயு திட்டங்களையும் அனுமதிப்பது திமுகவுக்கு புதிதல்ல. 2010-ம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்ட்ரன் நிறுவனத்திற்கு அப்போதைய திமுக அரசு அனுமதி அளித்தது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு துரோகம் செய்திருந்தார். அதற்கு எதிராக பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், உழவர் அமைப்புகளும் தீவிர போராட்டம் நடத்தியதால்தான் அந்தத் திட்டம் அப்போது செயல்படுத்தப்படவில்லை. இப்படியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரோகம் செய்வது திமுகவின் வாடிக்கைதான்.

வேடிக்கை பார்க்க முடியாது

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதால் ஏற்படும் பாதிப்பு ராமநாதபுரம் மாவட்டத்துடன் மட்டும் நின்று விடாது. தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த இதுவரை 5 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி மொத்தம் 7,250 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதையே காரணம் காட்டி அடுத்தடுத்து பிற திட்டங்களுக்கும் அனுமதி பெற ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் முயலும். அந்த முயற்சி வெற்றி பெற்றால், அதன்பின் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.பிற மாவட்டங்களில் இத்தகைய திட்டங்கள் வலிந்து திணிக்கப்படுவதை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது.

தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 வருவாய் மாவட்டங்களை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் விரிவுபடுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பழங்குடியினர் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு ! தேனியில் கம்யூனிஸ்ட் கட்சி வீதிப்போராட்டம் !
Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!