
ONGC Granted Permission To Set Up 20 Hydrocarbon Wells In Ramanathapuram: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அனுமதி வழங்கியுள்ளது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி (ONGC) 2019ம் ஆண்டு மத்திய அரசின் திறந்தவெளி ஏலத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி பெற்றது.
20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 20 இடங்களில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் சோதனைக் கிணறுகள் அமைக்க அனுமதிக்கும்படி தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்டிருந்தது. அதற்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராமநாதபுரம் மாவ்பட்டத்தில் தனிச்சியம், பேய்குளம், கீழ்செல்வனூர், வேப்பங்குளம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல் உள்ளிட்ட கிராமங்களில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி
ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி அளித்திருப்பது மாவட்ட விவசாயிகளிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் எச்சரித்துள்ளனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் என்னென்ன பேரழிவு ஏற்படும்?
ஹைட்ரோகார்பன் எடுக்க பெருமளவு நீர் மற்றும் 70 வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசுபடும் அபாயம் உள்ளது. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்படும். மேலும் ராமநாதபுரம் மாவடட்த்தில் ஏற்கெனவே குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் இனி முற்றிலுமாக இருக்காது.
எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.