காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடியின இருளர் 7 பேரை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி, காட்டேரிக்குப்பம் காவல்நிலையம் அருகே மீன் பிடிக்க சென்ற பழங்குடி இருளர் இருவர் மற்றும், விழுப்புரம் மாவட்டம் ஆறுபுளியமரம் அருகே செங்கல் சூளையில் இருந்து 5 பழங்குடி இருளர் என மொத்தம் 7 பேரை புதுச்சேரி காவல்துறையினர் பிடித்து சென்று சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 28-ம் தேதி வரை காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
பச்சை மிளகாய் சாறை பிழிந்து கண்களில் விட்டும், முகத்தில் தேய்த்தும் சித்ரவதை செய்ததுடன், கண்டுபிடிக்க முடியாது திருட்டு வழக்குகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தை தொடர்ந்து விழுப்புரம் வாட்டம் மயிலம், கண்டமங்கலம், புதுச்சேரி மங்கலம், வில்லியனூர் காவல்நிலையங்களிலும் 9 திருட்டு வழக்குகள் மேற்கூறிய இருளர்கள் மீது போடப்பட்டது.
இதையும் படிங்க : ஹெலிகாப்டரில் சென்று கோயில்களில் தரிசனம்!நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பல்-அலெட்ர்ட் செய்யும் சைபர் கிரைம்
புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை சித்ரவதை செய்து, அவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் கடந்த மாதம் விழுப்புரம், புதுச்சேரியில் மக்கள் உரிமை அமைப்பு மற்றும் பழங்குடியின பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் புதுச்சேரி அரசு இதுவரை குற்றமிழைத்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா உள்ளிட்ட போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் பணியிடை நீக்கம் கூட செய்யவில்லை.
பழங்குடி ஆர்வலர் சுரேஷ் குமார் இதுகுறித்து பேசிய போது “ இருளர் பழங்குடியினருக்கு எதிரான காவல்துறை அத்துமீறல் ஒன்றும் புதிதல்ல. ஒரு திருட்டு வழக்கு அல்லது கிரிமினல் வழக்கில் குற்றவாளிகள் கிடைக்காவிட்டால், சில பழங்குடியினரையும், பெரும்பாலும் இருளர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை சித்ரவதை செய்கின்றனர். அவர்கள் தாக்கப்பட்டு, அவர்களுக்குத் தெரியாத குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் மற்றும் மயிலம் காவல் நிலையங்களில் பதியப்பட்ட திருட்டு வழக்குகளின் குற்றச்சாட்டை இருளர்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இதேபோல், புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் இருளர்கள் மீது 4 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.
இருப்பினும் காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இந்த இருளர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது காவல்துறையினரின் கருத்தாக உள்ளது. விசாரணை செய்யப்பட்ட சந்தேகநபர்களே இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மனித உரிமை ஆர்வலர்கள் மறுத்துள்ளனர்.
மற்றொரு மனித உரிமைகள் மற்றும் பழங்குடியினர் உரிமை ஆர்வலர் கல்யாணி இதுகுறித்து பேசிய போது , " இந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாருக்கும் திருட்டு அல்லது கிரிமினல் வழக்குகள் இல்லை. திருட்டு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் இந்த மக்கள் செங்கல் சூளைகளில் இருந்ததற்கான பதிவுகள் இருக்கிறது..” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!