விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது… அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Nov 30, 2021, 8:57 PM IST
Highlights

விதிகளைப் பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விதிகளைப் பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்கவும் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொடிக்கம்பங்கள் பேனர்கள் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  இதையடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தான் சென்ற போது, ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தெரிவித்தார். பின்னர் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய தமிழக நீதிபதிகள் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, திமுக உள்ளிட்டோர் தரப்பில் ஆறு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேனர்கள் வைக்க கூடாது என்று கழகத்தினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதே போல் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளதாக  தெரிவித்தனர். மேலும், விழுப்புரம் சம்பவத்தைப் பொறுத்தவரைச் சிறுவனை பணிக்கு அமர்த்தியது காண்ட்ராக்டர் தான் எனவும், அவர் தரப்பில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காண்ட்ராக்டர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் ஜாமீனில் உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர்கள் வைப்பதை முறைப்படுத்தச் சட்டம் உள்ளதாகவும், அதன்படி விதிமீறிச் செயல்படுபவர்களுக்குச் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து கருத்துக்களை பதிவு செய்த நீதிபதிகள், விதிகளை பின்பற்றாமல்  பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முதல்வர் கூறினால் போதாது, கடுமையான நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்தனர். மேலும் சட்டவிரோத பேனர் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இது ஆளுங்கட்சிக்கு மட்டுமான அறிவுறுத்தல் கிடையாது, அனைத்து கட்சிக்குமான அறிவுறுத்தல் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் அனுமதி பெற்றே பேனர்கள் வைப்பதாக நினைக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அனுமதி பெறாதவர் மீது யாரிடம் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர். அரசியல்வாதிகள் மட்டுமல்ல மற்றவர்களும் பேனர்கள் வைப்பதாகக் கூறிய நீதிபதிகள், பலியான சிறுவனின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கி விட்டு, சம்பந்தப்பட்ட கட்சியிடம் வசூலிக்க வேண்டும் என மனுதாரர் கோருவது போல உத்தரவிட முடியாது என மறுத்து விட்டனர். பின்னர், விதிகளைப் பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

click me!