
கடலூர் எம்.எல்.ஏ முருகுமாறனைக் காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 20 பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில் அவர்கள் அனைவரும் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள கோல்டன் பே சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொகுதி பிரச்சனை குறித்து எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளிக்க வரும் மக்கள், எம்.எல்.ஏ இல்லாததால் அவர்களை சந்திக்க முடியாமல் திரும்புகின்றனர். இதனால் பல இடங்களில் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றும் அவர்கள் கடத்தப்பட்டனர் என்றும் கூறி அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் முருகுமாறனை காணவில்லை என்று அந்தத் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
“காட்டுமன்னார்கோவில் புளியந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி லதா (35). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 பெண்களுடன் நேற்று காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்குச் சென்று தொகுதி எம்.எல்.ஏ. முருகுமாறனை காணவில்லை என்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முருகுமாறன். எங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து முருகுமாறன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து மனு கொடுக்க அவரது அலுவலகத்திற்கு கடந்த 10–ந்தேதி சென்றோம். ஆனால் அன்றைய தினம் அவர் அங்கு இல்லை.
இந்த நிலையில் தொடர்ந்து அவரை சந்திக்க முயற்சித்த போது, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து இருந்த நிலையிலும் அங்கு முருகுமாறன் எம்.எல்.ஏ. இல்லை.
எனவே காணாமல் போன முருகுமாறன் எம்.எல்.ஏ.வை தாங்கள் கண்டுபிடித்து தரவேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும், “நாங்கள் அளித்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் விஜயகுமாரை நேரில் சந்தித்து மனு அளிப்போம்” என்று லதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.