
தமிழக உளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை தலைவராக இருந்த சத்திய மூர்த்தி பதவி விடுப்பில் சென்றதை அடுத்து டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் சத்திய மூர்த்தி. ஆரம்பத்தில் சசிகலா ஆதர்வாளராக அடையாளம் காட்டப்பட்ட சத்திய மூர்த்தி நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் பணியாற்றியவர். பின்னர் பல பதவிகள் வகித்து கடந்த 2015 ஆம் ஆண்டு டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை மாற்றிய பின்னர் சத்திய மூர்த்தியை கொண்டு வந்தனர்.
டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தயாநிதி மாறனுக்கு நெருங்கிய நண்பர் என்று தெரிந்தும் அவரை நியமித்த ஜெயலலிதா பின்னர் அற்ப காரணங்களுக்காக அவரை மாற்றினார். தனது பணியை திறம்பட செய்த டேவிட்சன் தேவாசிர்வாதம் பின்னர் காவலர் நலன் ஐஜியாக மாற்றப்பட்டார்.
சத்திய மூர்த்தி தலைமையின் கீழ் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு பின்னடைவாக தேர்தல் நேரத்தில் அவர் மாற்றப்பட்டார். பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா சத்திய மூர்த்தியை அதே இடத்தில் நியமித்தார்.
ஒழுங்காக சென்று கொண்டிருந்த நிலையில் ஜெயலலிதா நோய் வாய்ப்பட்டு மரணமடைந்தார். அதன் பின்னர் அதிமுக மேலிடம் இவரை ஓபிஎஸ் ஆளாக பார்த்தது. இதனால் மனம் நொந்த சத்திய மூர்த்தி விடுப்பில் சென்றார்.
அதன் பின்னர் ஓபிஎஸ் தனியாக வந்த பின்னார் மீண்டும் சத்திய மூர்த்தியை விடுப்பை ரத்து செய்து வரும்படி கூறினாலும் வர மறுத்து விட்டார். இதையடுத்து முன்பு இருந்த அதிகாரி டேவிட்சனை உளவுத்துறை தலைவராக மீண்டும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அபூர்வாவர்மா பிறப்பித்துள்ளார். டேவிட்சன் நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்தவர். அவரது மாமனாரின் ரியல் எஸ்டேட் தொழிலுடன் இவரை சேர்த்து எழுதி தேவையற்ற சர்ச்சையை சிலர் உருவாக்கியதன் பேரில் அவர் பதவி மாற்றப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
இதற்கு முன்னர் இதே உளவுத்துறை டிஐஜியாகவும் பணியாற்றிய டேவிடசன் இத்துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர்.