டெல்டாவில் மீண்டும் அடித்து துவம்சம் பண்ணவரும் கனமழை...

By sathish kFirst Published Nov 29, 2018, 3:34 PM IST
Highlights

தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் 2 நாட்களுக்குப் பெருமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பெருமழையும் பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் டெல்டா, உட்பகுதிகள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தின் உட்பகுதிகளில் ஈரப்பதமான சூழலை உண்டாக்கும் நிகழ்வால் மழை பெய்யும். தற்போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலை மேற்கு உட்பகுதிகளான விருதுநகர், திருநெல்வேலி, திருப்போரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தேனி, நீலகிரி, மதுரை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.

டெல்டா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. நாளை மழை அளவு குறைந்தாலும், தொடர்ந்து பெய்யக்கூடும். டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் உட்பகுதிகளிலும் நாளை மழை பெய்யும். வரும் டிசம்பர் 1 முதல் மழை அளவு குறையும். குறைந்த காற்றழுத்தப் பகுதி எங்கும் ஏற்படாததால், இம்மாத இறுதியில் புதிதாக புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை. இது தொடர்பாக தேவையற்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக டிசம்பர் 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை நல்ல மழை பெய்யக்கூடும்" என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 இதேபோல, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன். "தென் தமிழகக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது.

வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும். டெல்டா மாவட்டங்களில் பெருமழைக்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் பெருமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் பதிவான மழை அளவு 31 செ.மீ. ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 35 செ.மீ. ஆக இருக்கும். எனவே, இயல்பை விட 12 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாகத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆணைக்காரன் சத்திரத்தில் 7 செ.மீ. மழையும், சீர்காழியில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல சிதம்பரம், பரங்கிப்பேட்டை, மயிலாடுதுறை, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார் பாலச்சந்திரன்.

click me!