சூறாவளிக் காற்று, இடி - மின்னலுடன் ஈரோட்டில் பலத்த மழை; அணை, குட்டைகள் நிரம்ப வழிகின்றன...

First Published May 9, 2018, 6:33 AM IST
Highlights
heavy rain in erode with thunder and lightning


ஈரோடு

ஈரோட்டில் சூறாவளிக் காற்றுடன் இடி - மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலில் இருந்து விடுபட்டு இதமான சூழ்நிலையை மக்கள் ரசித்து அனுபவித்து வருகின்றனர். இந்த மழையால் தடுப்பணை மற்றும் வனக்குட்டைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப் பகுதியில் நேற்று காலையில் வெயில் கொளுத்தியது. ஆனால், மதியம் 1 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 

இடி - மின்னலுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்தது.

சாலையில் சாக்கடை நீருடன் மழைநீரும் ஓடியதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். மேலும், தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. 

அதனைத் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை இரவு வரை பெய்துகொண்டு இருந்தது. இதனால், குளிர்ச்சி நிலையே நகரம் முழுவதும் நிலவியது.

நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெய்த கனமழையால் கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள வனக்குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல, பசுவனாபுரம் பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வருகிறது.

இதனால் கடம்பூர் பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், குன்றி, மாக்கம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதேபோல கௌந்தப்பாடி மற்றும் பவானி பகுதியிலும் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.

அதேபோன்று, தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரேபாளையம், ஒங்கல்வாடி, திம்பம், சென்டர்தெட்டி, மாவள்ளம் ஆகிய பகுதியில் இடி - மின்னலுடன் நேற்று மாலை 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. 

அப்போது, சூறாவளிக் காற்றுடன் 1 மணி நேரம் விடாமல் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்குகெடுத்து ஓடியது.

இதேபோல, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், எண்ணமங்கலம், பட்லூர், வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்ததால் பூமி குளிர்ந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.
 

click me!