கொட்டித்தீர்க்கும் கனமழை… வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சென்னை!!

By Narendran SFirst Published Nov 7, 2021, 10:30 AM IST
Highlights

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைஅடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வந்தது. இதனிடையே தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. இதை அடுத்து டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ததோடு தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த தொடர் மழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு முழுக்க பெய்த மழை காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16.2 செ.மீ. மழையும் நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை எம்எம்டிஏ காலனி பகுதியில் சாலையில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஒரு பக்கமாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஈக்காட்டுதாங்கல் பகுதியிலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. சென்னை கோட்டூர் பகுதியில் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வழிந்து ஓடுகிறது. வில்லிவாக்கம் பகுதியில் சாலையில் வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு வெள்ளநீர் தேங்கி உள்ளது. வடபழனி, கிண்டி, தி நகர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், குரோம்பேட்டை, நங்கநல்லூர், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. பல இடங்களில் முட்டிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் மேற்கு மாம்பலத்தில் இருந்து தி.நகர் செல்லக்கூடிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் வெள்ள நீர் தேங்கியதால் பாதை மூடப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து பயன்பாடு குறைந்து காணப்பட்டாலும் தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு பலரும் திரும்பி வருவதால் அந்த பகுதிகளில் மட்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையில் நேற்று இரவு ஒரு நாள் பெய்த மழை மீண்டும் தொடர்ந்தால் என்ன நிலை ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் , புழல் சென்னைக்கு நீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட முழு அளவை எட்டும் நிலையில் உள்ளன. வரும் 9ஆம் தேதி தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

click me!