
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும், தமிழகத்தில் கலப்படம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதாக அடுத்தடுத்து புகார்களும் வலைதளங்களில் எச்சரிக்கை புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்து மக்களை பீதியடைய செய்கின்றன.
சிலநாட்களுக்கு முன்பு முட்டையில், பிளாஸ்டிக் முட்டை உருவாவதாக கூறி வைரலாக செய்திகள் வெளியாகின.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள பல மளிகைக்கடைகளில் பிளாஸ்டிக்அரிசி கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக வாட்ஸ் அப், பேஸ்புக்கில்வதந்தி பரவியதால் மக்களிடையே பதற்றமான சூழல் நிலவியது.
பிளாஸ்டிக் அரிசியால் செய்த சாதத்தை உருட்டி அதைக் கொண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் விடியோ சமூக தளங்களில் பரவியது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஹல்த்வான் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
இதைதொடர்ந்து தமிழகத்தில் இந்த பீதி தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு முகாம் நடத்தி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியே இல்லை எனவும், யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
ஆனால் பிளாஸ்டிக் அரிசியில் சமைத்து பந்து போல் அடித்து அடித்து விளையாடும் வீடியோ இன்னும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும், தமிழகத்தில் கலப்படம் தொடர்பான புகார்களை94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், கலப்படம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பக்கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.