
டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 56.92 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை வறண்டு கிடப்பதால் ஜூன் 12ல் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதாலும் காவிரியில் இருந்து கர்நாடகா வழக்கம்போல் தண்ணீர் திறந்து விடாததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்து விட்டது. இதனால் அணை குட்டைபோல் காட்சியளிக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றால், அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாக இருக்க வேண்டும்.
மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒரே சீராக இருந்தால் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடமுடியும்.
தற்போது அப்படி ஒரு சூழ்நிலை இல்லாமல் போனதால் மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை.
மேட்டூர் அணை பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது.
இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை எப்படி மேற்கொள்வது என கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 56.92 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கபடும் எனவும், இந்த ஆண்டு குறுவை தொகுப்பு திட்டம் 56.92 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 1,200 என 100 % மானியம் வழங்கப்படும் எனவும், பயறு வகை பயிர்களின் சாகுபடியை ஊக்கபடுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ. 960 வீதம் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 1.60 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், நெற் பயிருக்கு மாற்ற பயறுவகை பயர்கள் 1.32 லட்சம் ஏக்கரில் பயிரிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.