தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு காவல் துறையினரால் தேடப்படும் நித்தியானந்தா இறுதியாக கைலாசா எங்கு இருக்கிறது என்ற இடத்தை அறிவித்துள்ளார்.
சிஷ்யைகள் புடை சூழ தமிழகம், கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மடங்களை தொடங்கி செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த நித்தியானந்தா பாலியல் புகாரில் சிக்கியதும் சர்ச்சை நாயகனாக அறியப்பட்டார். மதுரை ஆதீனம் உட்பட பல்வேறு ஆதீனங்களிலும் நித்தியானந்தாவை இனி எங்கள் மடத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்டையாக அறிவித்தன.
மேலும் மடத்திற்கு சொந்தமான சொத்துகளை அபகரிப்பது, பாலியல் புகாரி சிக்குவது என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து நித்தியானந்தாவை தமிழகம், கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு மாநில காவல் துறையினரும் தேடத் தொடங்கின. கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்த நித்தியானந்தா திடீரென நாட்டை விட்டே வெளியேறி தலைமறைவானார்.
நித்தியானந்தாவின் புகழ் முடிந்தது, இனி அவர் வெளியில் வரமுடியாது, அவர் எங்கு இருந்தாலும் கைது செய்யப்படுவார் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், தாம் தனியாக நாடு ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்து பரபரப்பை கிளப்பினார். தமிழகத்தில் பலரும் ஒரு வீட்டை வாங்கவே தவியாய் தவிக்கும் நிலையில் நித்தியானந்தா ஒரு நாட்டையே வாங்கிவிட்டாரா என பேசப்பட்டது.
அவ்வபோது இணையதளத்தில் வீடியோ மூலமாக காட்சி கொடுத்த நித்தி அதன் வாயிலாக பல்வேறு அப்டேட்களையும் வழங்கி வந்தார். நாட்டை உருவாக்கிய நித்தியானந்தா அது எங்கு உள்ளது, அதற்கு எப்படி வரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில், குருபூர்ணிமா தினத்தில் கைலாசா எங்கு உள்ளது என்பது அறிவிக்கப்படும். எங்கள் நாட்டில் கோடீஸ்வரர் முதல் சாமானியன் வரை அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். மேலும் எங்கள் நாட்டில் கல்வி, உணவு, மருத்துவம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதால் யாருக்கும் பணம் தேவையில்லை என்று அறிவித்தார்.
அவர் தெரிவித்தபடியே கைலாசா எங்கு உள்ளது என்பதை தற்போது அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கரீபியன் தீவு, பசுபிக், தென் அமெரிக்கா உள்ளிட்ட 7 இடங்களில் கைலாசாவுக்கு சொந்தமான இறையாண்மை பிரதேசங்களும், சுயாட்சி பிரதேசங்களும் உண்டு என்று தெரிவித்துள்ள நித்தி, இனிவரும் காலத்தில் வேறு சில இடங்களையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இவற்றை தொடர்பு கொள்ளும் நபர்கள் நபர்களுக்கு நேர்முக தேர்வு மூலம் ஆள்சேர்க்கப்பட்டு உலகின் பல்வறு பகுதிகளில் உள்ள கைலாசா கேம்பஸ்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
சன்யாசிகளுக்கான கேம்பஸ் ராமகிருஷ்ணா மடத்தைப் போன்றும், சன்யாசியைகளுக்கான கேம்பஸ் சாரதா மடத்தைப் போலவும், குடும்ப உறுப்பினர்களுக்கான கேம்பஸ் புதுவை ஆரோவில்லைப் போன்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.