
நாமக்கல்
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் முட்டிப்போட்டு போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது ஆண்டகளூர்கேட். இங்கு செயல்பட்டு வரும் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் படிக்கின்றனர்.
இங்கு ஆசிரியர்களாக 132 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 54 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை பணி புரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரியின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று கௌரவ விரிவுரையாளர்கள், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
உயர்கல்வி துறைச் செயலர் அலுவலக கடிதத்தின்படி தொடர்ந்து கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை சிறப்பு தேர்வின் மூலம் பணி நியமனம் செய்யும் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும்,
யு.ஜி.சி. விதிகளின்படி கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக கௌரவ விரிவுரையாளர்கள் 46 பேர் கருப்பு கொடியணிந்தும், முட்டிப் போட்டும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் முட்டிப்போட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.