
கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடியது. பின்னர், கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விவாதம் நடைபெறவில்லை. இதனால், எதிர்க்கட்சியினர் பட்ஜெட் குறித் விவாதங்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையில் விவசாயிகள் கடன் பிரச்சனை, மாட்டு இறைச்சி பிரச்சனை என ஏராளமாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் ஜிஎஸ்டி மசோதா அமல் படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 14ம் தேதி (இன்று) சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.
அதே நேரத்தில், ஜிஎஸ்டி மசோதா குறித்த எந்த தகவலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. வந்த பிறகு, அதை பற்றி பரிசீலனை செய்வோம் என நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சட்டமன்றம் கூடுகிறது. இதில், வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி, ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என கோருவதாக தெரிகிறது. அவ்வாறு ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்தால், கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் மழை பொய்த்து போனதால், விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுபோன்ற பிரச்சனைகளை சட்டமன்ற பட்ஜெட் விவாதத்தின்போது பேசாமல், முதல் நாளிலேயே ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என அமைச்சர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின்னர், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும், குறிப்பாக ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்கள் உள்பட அனைத்துக்கும், தமிழக அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.