
திருவாரூர்
திருவாரூரில் அரசின் நலத் திட்டங்களை அறிந்து அதனை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
“மாற்றுத் திறனாளின் நலன் காக்க தமிழக அரசு தேசிய அடையாள அட்டை, கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.7000 வரை கல்வி உதவித் தொகை மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையம்,
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையம், 18 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய ஆண்களுக்கான தொழில் பயிற்சியுடன் கூடிய மையம்.
பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்களுக்கு உதவித்தொகை, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதம்தோறும் ரூ.1500 பராமரிப்பு உதவித்தொகை,
தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதம்தோறும் ரூ.1000 பராமரிப்பு உதவித்தொகை, பார்வையற்றோர் மற்றும் கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோரை திருமணம் செய்யும் நபருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம். மாற்றுத் திறனாளிகள் பட்டயம் பெற்றிருந்தால் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம்,
மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு முழுவதும் பேருந்தில் பயணம் செய்ய 75 சதவீதம் வரை கட்டணச் சலுகை, சுயதொழில் புரிய ரூ.30 ஆயிரம் வங்கிக் கடன் பெறும் மாற்றுத் திறனாளிக்கு மானியத் தொகை ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ வசதிக்காக நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தில் மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று சிறப்புப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி, பிஸியோதெரபி சிகிச்சை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நான்கு நாள்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் தெருமுனை விளக்க விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.
இதன்மூலம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து, மாற்றுத் திறனாளிகள் பயன்பெறவேண்டும்” என்றார் ஆட்சியர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியர் விநியோகம் செய்தார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.ரவீந்திரன், புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் கலைசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.