
கள ஆய்வில் முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார். இதுவரை 15க்குமே மேற்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வேலூரில் நானோ, அமைச்சர்களோ, துறை செயலாளர்களோ என்ன மாதிரியான கேள்விகளை முன்வைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு மற்ற மாவட்டத்து அதிகாரிகள் அதனைத் தங்கள் மாவட்டத்தில் முடித்து வைத்திருக்கிறார்கள். நம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வந்தால் இதையெல்லாம் கேட்பார் என்று நினைத்து செயல்படுத்தி வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.
ஆலோசனை வழங்கிய ஸ்டாலின்
மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் காணப்பட்டது. நான் எந்தத் துறையையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. மாவட்ட ஆட்சியர்களும், துறைத் தலைவர்களும் அறிவீர்கள். அளிக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக, திட்டத்திற்காக செலவிடுவது தான் திறன்மிகு நிருவாகம் ஆகும். அதைத்தான் நான் உங்களிடம் எதிர்ப்பார்கிறேன் என தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் அனைத்துமே விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் ஆய்விற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றம் என தெரியவந்துள்ளது.
அரசு அதிகாரிகள் இட மாற்றம்
அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருமதி. எஸ். செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு. ம. ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. ஜி. சரஸ்வதி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திருமதி. கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்