
பிரதமர் நரேந்திர மோடியின் 'மன் கி பாத்' வானொலியில் உரை நிகழ்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ஒலிபரப்பானது. அன்று தொடங்கி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் (DD) நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்களில் ஒலிபரப்பாகி வருகிறது.
இந்த வானொலி உரை நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் இன்று ஒலிபரப்பானது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாஜகவினரும் பொதுமக்களும் பிரதமரின் உரையைக் கேட்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரை ஐ.நா. சபையின் தலைமையகத்திலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மன் கி பாத் நிகழ்ச்சிகளில் தமிழகத்தைப் பற்றி பிரதமர் பேசியவை தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். "பிரதமர், மனதின் குரல் நிகழ்ச்சிகளில் தமிழகத்தைப் பற்றியும், தமிழ்ச் சகோதர சகோதரிகள் குறித்தும் பெருமைப்படுத்திக் குறிப்பிட்ட நிகழ்வுகளைத் தொகுத்து, ‘Celebrating Tamilnadu’ என்ற புத்தகமாக இன்று வெளியிட்டோம்" என அவர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
மேலும், "பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி உலகிலேயே அதிக மக்களால் கேட்கப்படும் நிகழ்ச்சியாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, இன்று 100 ஆவது நிகழ்ச்சி எனும் மைல்கல்லை எட்டியிருக்கிறது" எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சேகர் ரெட்டி, தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.