
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 வயது குழந்தை உள்பட 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை திருவண்ணாமலையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது.
அதேபோன்று சென்னையில் இருந்து போளூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
இரண்டு அரசுப் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மரத்தில் மோதியது. போளூர் நோக்கிச் சென்ற பேருந்து பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தால் பேருந்து ஓட்டுநர்கள் விருஷபதாஸ், பிரகாஷ் உள்பட பேருந்துகளில் பயணித்த அபிநயா என்கிற இரண்டு வயது குழந்தை, வந்தவாசியைச் சேர்ந்த தமிழ்செல்வி, செஞ்சி வட்டம், மேல்காரணியைச் சேர்ந்த காயத்ரி, சாந்தி, செல்வி, குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, சிவகுரு உள்பட 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் காவலாளர்கள், தீயணைப்புத் துறையினர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏழுமலை ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர், அவர்கள் அனைவரையும் சேத்துப்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.