
திருவள்ளூர்
திருவள்ளூரில் காதலித்து திருமணாம் செய்து கொண்ட மனைவியை பிரித்து சென்று கருவை கலைத்த மனைவியின் பெற்றோரிடம் இருந்து மனைவியை மீட்டு தருமாறூ அமைச்சர், மாவட்ட ஆட்சியர் முன் கணவன் தீக்குளிக்க முயன்றார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்ஜமின், எம்எல்ஏ-க்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்த விழா முடிந்ததும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கார் அருகே வந்தனர். அப்போது அமைச்சர் காரில் ஏறச் சென்றபோது, அவர்களின் கார் முன்பு வந்த இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டார். பின்னர், தீக்குளிக்க முயற்சியும் செய்தார்.
அதனைக் கண்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், “அவர் விடையூர் கிராமத்தைச் சேர்ந்த கர்னல் குமார் (24) என்பதும், தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட திவ்யா (20) நான்கு மாதங்கள் கருவுற்றிருந்த நிலையில், தன்னிடம் இருந்து திவ்யாவை அவரது பெற்றோர் பிரித்து அழைத்துச் சென்று விட்டனர் என்றும், அவரது கருவை கலைத்து விட்டதாகவும், தன்னிடம் அவரை ஒப்படைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளைஞரை திருவள்ளூர் நகர காவலாளர்கள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.