
திருவள்ளூர்
திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, முதல்வர்ஃப் எடப்பாடியிடம் மனு ஒன்றை அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ளது, அண்ணா பேருந்து நிலையம். இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை, திருப்பதி, வேலூர், சித்தூர், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.
தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடக்கிறது.
இதனையடுத்து, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நகரவாசிகளின் பலநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
கடந்த 25-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் அமைக்க, தமிழக அரசு ரூ.25 கோடி மதிப்பிலான 4.60 ஏக்கர் நிலத்தை நகராட்சிக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த நிலையில், அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, அமைச்சர் பெஞ்ஜமின், எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, திருத்தணியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து எம்.பி. திருத்தணி கோ.அரி, “புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு, ரூ.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்ற மனுவை அளித்தார்.
அவரிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.