
விழுப்புரம்
விழுப்புரத்தில் முடியும் தருவாயில் இருகும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை, பணியாளர்களை அதிகப்படுத்தி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கம் செல்லும் இரயில்வே கேட் வழியாக இரயில்கள் செல்லும்போது கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்தப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இங்கு இரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.34 கோடியே 75 இலட்சம் நிதி ஒதுக்கியது. அதன்படி இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும் தொடங்கியது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பணி கடந்த ஜனவரி மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இதுவரை இந்தப் பணிகள் நிறைவடையில்லை.
தற்போது இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலைகளின் பக்கவாட்டில் பலப்படுத்தப்பட்ட சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை இரயில்வே மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, “பணியாளர்களை அதிகப்படுத்தி இணைப்பு சாலை பணிகளை விரைந்து முடித்து விரைவில் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்று நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ஜீனத்பானு, தாசில்தார் பத்மா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பன்னீர்செல்வம், அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் நடராஜ், நிலஅளவை வட்ட துணை ஆய்வாளர் மணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.