அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பலி – சுங்குவார்சத்திரத்தில் பரபரப்பு

First Published Oct 15, 2016, 12:05 AM IST
Highlights


சுங்குவார்சத்திரம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 6ம் வகுப்பு மாணவன், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் கண்டிகையை சேர்ந்தவர் விஜி. தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகன் அரிகரன் (11). திருவள்ளூர் அருகே பன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் இன்று காலை அரிகரன், பள்ளிக்கு புறப்பட்டான். சுங்குவார்சத்திரம் பஸ் நிறுத்தத்தில், பள்ளிக்கு செல்லும் பஸ்சுக்காக காத்திருந்தான். அந்த நேரத்தில் வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் ஏராளமானோர் நின்றிருந்தனர்.

அப்போது, அரிகரன் செல்லும் அரசு பஸ் வந்தது. ஏற்கனவே பஸ்சில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதில், உள்ளே சென்றுவிடுவதற்காக மாணவர்கள், ஓடி சென்று ஏறினர். அரிகரன் ஏறுவதற்கு முன்னதாகவே, டிரைவர் பஸ்சை இயக்கினார்.

இதனால், முன் பக்க படிக்கட்டில் ஏறிய மாணவன், நிலைதடுமாறி கீழே விழுந்தான். இதில், பின் சக்கரம் அவன் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான். இதை பார்த்ததும், பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சுங்குவார் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

click me!