
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே, கடற்கரை பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில், டாஸ்மாக் கடைகளை மூடிய பிறகு, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காசிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் மாறு வேடத்தில் சென்று தீவிரமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் போலீசார், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, கையில் பெரிய பையுடன் சிலர், சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திறிந்தனர். அவர்களை, போலீசார் அழைத்தபோது, அங்கிருந்து தப்பியோடினர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று 4 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிம் இருந்த பையை சோதனை செய்தபோது, 100க்கு மேற்பட்ட குவாட்டர் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்த ராஜிவ் (60), ராஜேஷ் (38), சேகர் (28), சதீஷ்குமார் (28) ஆகியோர் என தெரிந்தது. பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.