
தமிழகத்துக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் கவர்னராக 2011 ஆகஸ்ட் 31ம் தேதி முதல் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் இருந்து வந்தார். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசு பதவி ஏற்றது. அதன் பின்னர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட பல கவர்னர்கள் பதவி விலகினர். சிலர் பதவி விலகுமாறு வைக்கப்பட்டனர். ஆனால் ரோசய்யா, பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படக்கூடும் என கருத்து நிலவியது. ஆனால் அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்புக்கான அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவை மத்திய அரசு நியமனம் செய்தது. அவரும் தமிழக பொறுப்பு கவர்னராக கடந்த மாதம் 2ம் தேதி பதவி ஏற்றார்.
இதற்கிடையே முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 11ம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் ஒதுக்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில் முதலமைச்சர் பதவியில் ஜெயலலிதா தொடருவார் எனவும் அவர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருவதால் தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய முழு நேர கவர்னர் நியமிப்பது அவசியம் என மத்திய அரசு கருதி, இதற்கான முடிவு எடுத்துள்ளது.
இதுபற்றி மத்திய அரசு சார்பில் அதிகாரிகள் கூறியதாவது. ‘‘தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிப்பதற்கான பணி நடந்து வருகிறது’’ என்றனர்.