
கோவையில் தங்க நகை தொழில் பூங்கா : கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது தங்க நகை உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், 126 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என உறுதி அளித்தார். பொள்ளாச்சி சாலையில் சிட்கோ தொழில்பேட்டை அருகே அருகே தங்க நகை பூங்காவிற்காக நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணிகள் தொடர்பாக கோவை கொடிசியா வளாகத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் , தங்க நகை உற்பத்தியாளர் சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சிட்கோ பகுதியில் அமைக்கப்பட இருக்கும் தங்க நகை பூங்காவின் மாதிரி வரைகலை வீடியோவை வெளியிட்டு அதில் அமைக்கப்பட இருக்கும் வசதிகள் குறித்தும், தொழில் முனைவோரின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரன், 2.46 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த தங்க நகை பூங்கா அமைக்கப்படுகின்றது எனவும் ,என்னென்ன வசதிகளுடன் அமைக்கப்பட இருக்கின்றது என்பதை அவர்களிடம் தெளிவு படுத்தி இருக்கின்றோம், என்னென்ன தேவை என்பது குறித்தும் கேட்டு இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே சிறத்த தங்க நகை பூங்காவாக கோவையில் அமையும் பூங்கா இருக்கும் எனவும், புதியதாக அமைய இருக்கும் தங்கநகை பூங்காவில் தங்கநகைபட்டறை, ஹால்மார்க் மையம், பாதுகாப்பு மையம், கூட்ட அரங்கம், பார்க்கிங் , உணவகம் என பல்வேறு வசதிகள் இதில் ஏற்படுத்தபட்டுள்ளது என கூறினார். 18 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 4 ஆண்டுகளில் 69.55 கோடி மானியம் வழங்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.