
தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒவ்வொரு கடைக்காரர்களும் விற்பனையை அதிகப்படுத்த வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்வது வாடிக்கைதான்.
ஆனால், சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள தனியார் ஏஜென்சி ஒன்று, விற்பனையை அதிகப்படுத்த, டூ-வீலர் வாங்குபவர்களுக்கு ஒரு ஆடு இலவசமாக அளிக்கப்படும் என்று செய்த விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தனியார் ஒருவர் ஹீரோ வாகனங்களுக்கான முகவராக இருந்து வருகிறார். இவர்தான் தீபாவளி பண்டிகை நேரத்தில் டூ-வீலர் விற்பனையை அதிகப்படுத்த இந்த விளம்பரத்தை செய்துள்ளார்.
அதாவது இம்மாதம் 11 ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தனது ஏஜென்சியில் ஹீரோ இரு சக்கர வாகனங்கள் யார் வாங்கினாலும், அவர்களுக்கு ஒரு ஆடு இலவசமாக அளிக்கப்படும் என விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரம் அந்த மாவட்டத்தையே கலக்கி வருகிறது.
இது குறித்து தனியார் ஏஜென்சியின் உரிமையாளர் கூறுகையில், “ ஒவ்வொரு நிறுவனத்தின் முகவர்களும் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க புத்தாக்க முறையில் விளம்பரம் செய்கிறார்கள். ஹோண்டா விற்பனையாளர் வாடிக்கையாளர்களுக்கு ‘ஷோபா இருக்கை’ பரிசாக அளிக்கிறார். நாங்கள் என்ன இலவசமாக அளிக்கலாம் என சிந்தித்தோம்.
அப்போதுதான் டூவீலர் வாங்குபவர்களுக்கு இலவசமாக ஆடு பரிசு அளிக்கலாம் என சிந்தித்து விளம்பரம் செய்தோம். இந்த விளம்பரத்துக்கு இப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
எங்களுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 100 தொலைபேசி அழைப்புகள் இது தொடர்பாக வந்துள்ளது. ஆடு இலவசம் என்பதால் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், கைவசம் ஆடுகள் போதுமானதாக இல்லை. ஆடுகளை வாங்க முயற்சி எடுத்து வருகிறோம் ’’ என்றார்.