பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சவுக்கு சங்கர் கைது
அரசியல் தலைவர்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து யூடியூப் மூலம் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்து வந்தார். இதில் பல்வேறு கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் விமர்சித்து வந்தவர் பெண் காவலர்கள் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்ட நிலையில் கோவை காவலர்களால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரை காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதனையடுத்து வலது கையில் கட்டோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை 10 காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதி சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், சவுக்கு சங்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் கோவை ஜே எம் 4 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
மருத்துவமனையில அனுமதி
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதால் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட உள்ளார். முன்னதாக அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கான சிகிச்சை அளிப்பதற்காக சவுக்கு சங்கரை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவரது கையை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் சவுக்கு சங்கரை அழைத்து செல்லவுள்ளனர்.