தமிழக அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகள் … வரும் கல்வியாண்டில் 53 ஆயிரம் பேரை சேர்க்க அரசு அதிரடி உத்தரவு !!

By Selvanayagam PFirst Published Dec 19, 2018, 7:44 AM IST
Highlights

தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார், அதன்படி இதற்காக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பில் தமிழகத்தில் அண்மைக் காலமாக பெற்றோர் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், வாகன வசதி, சீருடை உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர்.

இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேருவது குறைந்து வருகிறது.

இதையடுத்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. 


இந்தப் பள்ளிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கான கற்றல் திறன், பேசுதல் மற்றும் எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட தரமான ஆரம்பக் கல்வி பெற்றோருக்குச் செலவில்லாமல் அளிக்கப்பட உள்ளது.


தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 52 ஆயிரத்து 933 மாணவர்களுக்கு மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சோதனை அடிப்படையில் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.


அங்கன்வாடி மையங்களில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, அவர்கள் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பள்ளிக்கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளன.

சமூக நலத்துறை மூலம் 2,381 அங்கன்வாடி மையங்களுக்கும் கல்வி கற்பதற்கான பொருள்கள், ஆசிரியர்களுக்கான கற்பிக்கும் உபகரணங்கள், கலர் பென்சில், கிரயான்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.


இத் திட்டத்துக்காக வரும் கல்வியாண்டுக்கு ரூ.7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.6 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரமும், சமூகநலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளன.
எல்.கே.ஜி. வகுப்பில் மூன்று வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளையும், யு.கே.ஜி. வகுப்பில் நான்கு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளையும் சேர்க்கலாம்.


தமிழகத்தில் மாவட்ட வாரியாக அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படவுள்ள மாணவர்கள் எண்ணிக்கை குறித்தும்தமிழக அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

 

click me!