நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் விருப்பமனு அளித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. இதனால், இரு கட்சிகளும் தங்களது தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகள் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேபோல், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, மக்களவைத் தேர்தலில் சீட் வாங்க பலரும் முயற்சித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு வருகிற மார்ச் 1 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது.
undefined
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு: நிறைவு செய்யும் திமுக!
தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தொகுதிக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து இன்று முதல் சமர்ப்பிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விருப்பமனு கட்டணமாக பொது தொகுதிக்கு ரூ.20,000, தனித்தொகுதிக்கு ரூ.15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் விருப்ப மனு அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் ரூ.15,000 கட்டணமாக செலுத்தி அவர் விருப்ப மனு அளித்துள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு, பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது. பவானிசாகர், உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி மக்களவைத் தொகுதி. இதில், அவினாசி (தனி) தொகுதியில், முன்னாள் சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
வெற்றி வாய்ப்பு எப்படி?
நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, மலைப்பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளை சேர்ந்த தொகுதிகளும் உள்ளன. நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய சமவெளி மாவட்டங்களைச் சேர்ந்தவை. இந்த மூன்று தொகுதிகளில் 60 சதவீத வாக்காளர்கள் உள்ளதால், வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக சமவெளிப் பகுதிகளே உள்ளன.
படுகர்கள், பழங்குடியினர், பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள், ஒக்கிலிகர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் உள்ளனர். இதில் மலை மாவட்டத்தில் படுகர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளனர். சமவெளிப் பகுதி மாவட்டங்களில் பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள்? இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை!
நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நீலகிரி தொகுதியில், 7 முறை காங்கிரச் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் ஆர்.பிரபு மட்டும் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். 1967இல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக கட்சிகல் வெற்றி பெற்றுள்ளன. பாஜக இரு முறை வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் ஆ.ராசா வெற்றி பெற்றிருந்தார். இதனிடையே, பாஜகவின் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அந்த தொகுதியை குறிவைத்து பல்வேறு பணிகளை செய்து வந்தார். எனவே, அவர் நீலகிரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராகியுள்ளார்.
நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் விருப்பமனு அளித்துள்ளதால், அவருக்கு சீட் அளிக்க கட்சி மேலிடம் பரிசீலிக்கும் என தெரிகிறது. திமுகவை பொறுத்தவரை, நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது அல்லது காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவின் ஆ.ராசா 547,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 54.36 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தார். 3,42,009 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த அதிமுகவின் தியாகராஜன், 33.94 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன் 4.09 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அவர் பெற்ற வாக்குகள் 41,169. சுயேச்சை வேட்பாளரும் 4.01 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். இந்த முறை மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்கட்சிக்கு கோவை பெல்ட்டில் கணிசமாக வாக்கு வங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.