
அதிமுக மாஜி எம்எல்ஏ திடீர் மரணம் : அதிமுகவினருக்கு அதிகாலையிலேயே அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் காலமாகியுள்ளார். திருப்பூர் தொகுதி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தவர், எம்எல்ஏவாக இருந்த போது பலதிட்டங்களை தொகுதியில் நிறைவேற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் S. குணசேகரன், Ex. M.L.A.,உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த அன்புச் சகோதரர் குணசேகரன் அவர்கள், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றி உள்ளார்.
அதேபோல், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர், மாநகராட்சி துணை மேயர் மற்றும் திருப்பூர் (தெற்கு) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றியவர். அன்புச் சகோதரர் குணசேகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும். இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.