
தன் வாழ்க்கைக்கு உதவும் விலங்கினங்களுக்கும் தனி பண்டிகை கொண்டாடும் மனிதர்களை கொண்ட தேசம் நம் இந்தியா தான்!
உழவுக்கு உதவும் மாடுகளுக்காக ‘மாட்டுப் பொங்கல்’ எனும் திருநாளை வடிவமைத்து தன் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை போற்றும் இந்தியன் அதிலும் தமிழன் யானைக்கும் தமிழர் திருநாளில் மரியாதை செய்கிறான். வனம் தாண்டி கிராமங்களுக்குள் வரும் காட்டு யானைகள் பயிர் பச்சைகளை தின்றும், மிதித்தும் அழிக்கின்றன. இதை தடுக்க அதே யானை இனத்தை சேர்ந்த, அடக்கி பழக்கப்படுத்தப்பட்ட கும்கி யானைகளை பயன்படுத்துகிறான். வனம் தாண்டி வரும் காட்டு யானைகளை மிரட்டியும், இடித்தும், பிளிறி முட்டியும் வனம் நோக்கி விரட்டியடிக்கின்றன கும்கிகள். இப்படி விவசாயத்துக்கும், விவசாயிக்கும் கைகொடுக்கும் கும்கிகளை போற்றும் விதமாக தை பொங்கல் திருநாளான இன்று ’வன பொங்கல்’ எனும் பெயரில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
அந்த வகையில் கோயமுத்தூர் மாவட்டம் சாடிவயலில் உள்ள கும்கி முகாமில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கும்கி யானையின் முன்னிலையில் வன பொங்கல் வைத்து கொண்டாடினர். கும்கி யானைக்கும் பொங்கல் ஊட்டப்பட்டு சந்தோஷம் பரிமாறப்பட்டது.