
இந்த தேசத்து மக்களின் மனதிலிருந்து பகையுணர்வு அறவே நீங்கினாலும் நீங்கிவிடும். ஆனால் புகை மட்டும் நீங்குவதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவேயில்லை! வலது கையில் ஆறாம் விரலாக சிகரெட் மாறிவிட்ட நாட்கள் இது! புகையற்ற இந்தியாவை பல கண்கள் கனவாக கண்டுகொண்டிருக்கின்றன. அட்லீஸ்ட் தமிழகத்திலாவது அது நிறைவேறுமா? என்பது பலரது வெறித்தனமான விருப்பமாக இருக்கிறது.
இந்நிலையில், பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கும் சட்டத்தை கண்டிப்புடன் அமல் படுத்த கோரி தக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து வருகிறார். இந்த சூழலில் நீதியரசர் பிறப்பித்திருக்கும் சில உத்தரவுகள் ’புகை, போதையற்ற தமிழகம்’ எனும் கனவில் கணிசமான மைல் கற்களை எட்டுவதற்கு சாத்தியங்களை உருவாக்கியுள்ளன.
அவை இவைதான்...
* சிறார்கள் பப் மற்றும் பார்களுக்கு சென்று மதுபானம் மற்றும் குட்கா பயன்படுத்துவது குறித்து செய்திகள் வருகின்றன. இது குறித்து அரசுதரப்பில் பதில் அளிக்க வேண்டும்.
* தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் எத்தனை பப்கள், ஹூக்கா பார்லர்கள் உள்ளன? உடனடி பதில் தேவை.
* மதுபானம் அருந்த, சிறார்கள் வருவதை தடுக்க பப்களில் சோதனை நடத்தப்படுகிறதா? எத்தனை வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன? சிறார்களை ஹூக்கா புகைக்க பார்லர்களில் அனுமதிக்கின்றனரா?
* கல்வி நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கிடைக்கிறதா என்பது குறித்து, சோதனை நடத்தியதற்கான விபரங்கள் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து, மாவட்ட நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும் சேர்ந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும்.
* பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் மாவட்ட நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும் இணைந்து உள் விசாரணை நடத்தும்படி கல்வி நிறுவனங்களுக்கு டி.ஜி.பி. சுற்றரிக்கை அனுப்ப வேண்டும். தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கிடைக்கிறதா, நிவாரண நடவடிக்கைகள் என்ன? என போலீஸுக்கு அறிக்கையை கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும்.
- என கூறியுள்ளார்.
அரசாங்கமும், போலீஸ் துறையும், பள்ளி-கல்லூரி நிர்வாகங்களும் இந்த உத்தரவுகளை முறையாக பின்பற்றி, பக்காவாக செயல்பட்டால் வளரும் தமிழகம் புகையில் திணறாமல் தெம்பாக வளரும்.
புகை கலையுமா?!