பண்ணாரி அருகே அதிகரிக்கும் காட்டு யானைகளின் மர்ம மரணம்; குட்டியுடன் சுற்றி திரிந்த யானைக்கு நேர்ந்த சோகம்

By Velmurugan sFirst Published Apr 11, 2024, 5:20 PM IST
Highlights

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் குட்டியுடன் சுற்றித் திரிந்த தாய் யானை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி அருகே இன்று காலை தனது குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று, உடல் நலம் குன்றி நடக்க முடியாமல் திடீரென படுத்துள்ளது. அப்போது வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள், யானையின் நிலை குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். 

என் தப்பு தான்; என்ன மன்னிச்சிருங்க - கரூரில் பெண்கள், சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்ட ஜோதிமணி

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சத்தியமங்கலம் வனத்துறையினர், கால்நடை மருத்துவரை அழைத்து சென்று, தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க துவங்கியுள்ளனர். உடல் நலம் குன்றிய அந்த பெண் யானைக்கு, சுமார் 40 முதல் 45 வயது வரை இருக்கலாம் எனவும், அதனுடைய குட்டிக்கு இரண்டு முதல் மூன்று வயது வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எதனால் உடல்நலம் குன்றி அந்த பெண் யானை தற்போது படுத்துள்ளது என்ற விவரம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தற்போது சிகிச்சை அளிக்க தொடங்கி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த இளைஞர்கள்; கைகொடுத்து ஊக்கப்படுத்திய ஆ.ராசா

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் தனது குட்டியுடன் வந்த தாய் யானை, உடல் நலம் குன்றி படுத்த நிலையில், இரு நாட்களில் அது பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் இதே போன்று ஒரு பெண் யானை உடல் நலம் குன்றி, திடீரென சரிந்து விழுந்து, ஒரே நாளில் உயிரிழந்தது. தொடர்ச்சியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் காரணத்தாலும், வயது மூப்பு காரணமாகவும் யானைகள் தொடர்ச்சியாக இறந்து வருவது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!