மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், கடலூர் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாறுப்பட்ட நிலப்பரப்பை கொண்டுள்ள தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்திருக்கும் கடலூர் மக்களவைத் தொகுதி, நெய்வேலி என்எல்சி நிறுவனம், கடலூர் துறைமுகம் எனப் பல அடையாளங்களைக் கொண்டதாக இருந்தாலும், அவ்வப்போது பெரும் போராட்டங்கள் நடைபெறும் தொகுதியாகவும் உள்ளது. மீன்பிடித் தொழிலும், முந்திரி விவசாயமும் முக்கியத் தொழிலாக உள்ளது. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். கிராமப்புற பகுதிகளே இந்த தொகுதியில் அதிகமாக உள்ளது.
undefined
கடலூர் மக்களவைத் தொகுதியில் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திட்டக்குடி, நெய்வேலி, பன்ருட்டி, விருதாச்சலம், கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் விஷ்னு பிரசாத், அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சிவகொழுந்து, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தல் 2024இல் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், மூன்று கட்சிகளுமே தங்களது கூட்டணி கட்சிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியுள்ளன. கடலூர் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை, 1951ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அதிக முறை காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது. 5 முறை திமுகவும், 2 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் 50.27 சதவீத வாக்குகளுடன் 522,160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் கோவிந்தசாமி 36.41 சதவீத வாக்குகளுடன் 3,78,177 பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
மக்களவைத் தேர்தல் 2024: கோவை தொகுதி - கள நிலவரம் என்ன?
அந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஓரணியில் இருந்தன. ஆனால், இந்த முறை கூட்டணி உடைந்துள்ளதால், இந்த வாக்குகள் சிதறும் வாய்ப்புள்ளது. பாமக, தேமுதிகவுக்கு இப்பகுதியில் கணிசமாக வாக்கு வங்கி இருந்தாலும், தனித்து செல்வாக்கு செலுத்தும் வகையில் இருக்குமா என்பது கேள்வியே.
அதேசமயம், காங்கிரஸ் வேட்பாளரான விஷ்னு பிரசாத் ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்.பி. ஆவார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி. காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வெற்றிகள், திமுக கூட்டணி, சமூக வாக்குகள் ஆகியவை காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.