அரிய விலங்கான மரநாயை சட்டவிரோதமாக வேட்டையாடி கறி சமைத்து நண்பர்களுக்கு விருந்து வைத்த ஆட்டோ சங்க தலைவர் உட்ப இரண்டு பேரை வனத்துறை கைது செய்துள்ளது.
மரநாய் வேட்டை
வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும், பாதுகாக்கப்பட்ட விலங்குகளில் மரநாயும் ஒன்று, அந்தவகையில் மரநாயை வேட்டையாடி சாப்பிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜர் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ளது "தமிழ்நாடு அரசு வேளாண் அலுவலகம்". இந்த அலுவலகத்தில் வளாகத்தில் ஜன்னல் அருகே நேற்று இரவு ஆட்டோ டிரைவர்கள் சிலர் சட்டவிரோதமாக அரியவகை விலங்கான மர நாயை வேட்டையாடி கொன்று தோலுரித்து கறியை மட்டும் எடுத்து விட்டு வெட்டப்பட்ட மரநாயின் தலை, குடல் மற்றும் தோல் பகுதிகளை வேளாண் அலுவலகத்தில் முன்புறமுள்ள டிரக்கர் ஸ்டாண்டில் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து டிரக்கர் ஸ்டேண்டில் உள்ள டிரைவர்கள் சிலர் நெல்லை சரக வன அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
ஆட்டோ சங்க தலைவர் கைது
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வன காவலர் அஜித் தேவ ஆசீர் வேட்டை தடுப்பு காவலர் பேச்சிமுத்து ஆகியோர் மரநாயை கொன்றது யார் ? மரநாயை கொன்று கறி சமைத்து ஆட்டோ டிரைவர்களுக்கு விருந்து படைக்கப்பட்டதா ? அல்லது மரநாய் கறி விற்கப்பட்டதா ? எனவும் தீவிர விசாரணை செய்ததில் மரநாயை வேட்டையாடி கறி சமைத்து தின்றது ஆட்டோ சங்கத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் ஆட்டோ டிரைவர் தாமரை என தெரியவந்ததை அடுத்து வன பாதுகாப்புத் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.