
ஆறு மாதங்களாக எங்களுக்குச் சம்பளம் தராமல் அதிகாரிகள் அலைக்கழித்தும், ஏமாற்றியும் வருகிறார்கள் என்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 800-க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.
இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றியவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பணியாளர்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கோபமடைந்த அவர்கள் நேற்று காலை கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது ஆறு மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் சந்தோஷ் குமார், கறம்பக்குடி தாசில்தார் யோகேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமணிசேகரன், ஆறுமுகம் மற்றும் காவலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், தாங்கள் வேலைப் பார்த்ததற்கு ஊதியம் வழங்காமல் ஒன்றிய அலுவலர்கள் அலைக்கழித்து தங்களை ஏமாற்றுவதாக புகார் அளித்தனர்.
பின்னர் மாவட்ட திட்ட அலுவலர், இன்னும் 15 நாள்களுக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
நூறுநாள் வேலைத்திட்டப் பணியாளர்கள், ஆறு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.