திறக்கப்பட்டது மேட்டூர் அணை… 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 2:17 PM IST
Highlights

மேட்டூர் அணை திறக்கப்பட்டதையொட்டி அதன் கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் கடந்த  சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழை மறுநாள் காலை வரை நீடித்ததால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. தமிழகத்தில் மழை தொடரும் நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னையின் முக்கியப் பகுதிகள் பலவும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மூன்று தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில்  காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணை நிரம்பும் தறுவாயில் உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கடந்த 7 ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து. நேற்று வினாடிக்கு 27 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.

இன்று 26 ஆயிரத்து 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் மளமளவென உயர்ந்தது. நேற்றிரவு மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியை எட்டிய நிலையில் இன்று காலை அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது.  இதையடுத்து இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. அணையில் இருந்து காவிரியில் ஏற்கனவே 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்பு 5.30 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணிக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகவும், 6.30 மணிக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் 150 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு உள்ளது.  

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை முழு கொள்ளளவான 120 அடியை இன்று பிற்பகலிலேயே எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை கட்டி 87 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று 41 வது முறையாக அணை முழு கொள்ளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே காவிரியில் மேட்டூர் அணை உபரி நீர் 20 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோரம் இருக்கும் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை நிலவரத்தை கண்காணித்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அணை பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

click me!