2015 வெள்ளத்திற்கு பிறகு என்னதான் செய்தீர்கள்? சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 1:10 PM IST
Highlights

தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த ஞாயிற்றுகிழமை பெய்த மழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலை எங்கிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதோடு வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியது குறித்து, கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னதாக அரியலூர் பெரிய திருக்கோணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாமனக்கா ஏரியை மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் வந்த போது, நீர் வழிபாதைகளில் எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார். வெள்ளம் வடிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்  சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் அரசுக்கு, தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் தமிழகத்தில் பெய்துள்ள மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளதாகவும், அதனை முறையாக கற்று அடுத்தடுத்த காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரிலும் தவிக்கும் நிலை உள்ளது எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.  சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக மழைநீர் தேங்காமல் தடுக்க என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை என்றால் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, தற்போது பெய்துள்ள மழையால் 14,138 நீர்நிலைகளில் இதுவரை 3,691 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன என்று நீர்வள ஆதாரத்துறை பதில் அளித்துள்ளது. அரசு தரப்பில், மனுதாரர் அளித்த மனுக்கள் முறையாக பெறவில்லை என்றும் மீண்டும் புதிய புகார் அளித்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி தெரிவித்த பொதுவான கருத்துக்கள் குறித்தும்,  நீதிமன்றத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டும் அரசு முறையாக செயல்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மனுதாரர் குறிப்பிட்ட அரியலூர் ஏரி சம்பந்தமான கோரிக்கை தொடர்பாக மீண்டும் புகார் அளிக்கவும், அதன் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

click me!