செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் களமிறங்கிய அமுதா ஐ.ஏ.எஸ்….! ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி!

By manimegalai aFirst Published Nov 9, 2021, 12:33 PM IST
Highlights

ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ். அந்த பணியை தொடங்குவதற்கு முன்னரே மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்யும் குழுவில் இடம்பிடித்துள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ். அந்த பணியை தொடங்குவதற்கு முன்னரே மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்யும் குழுவில் இடம்பிடித்துள்ளார்.

அமுதா ஐ.ஏ.எஸ். என்ற பெயர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நேர்மையான பெண் அதிகாரியான அமுதா, தமது செயல்பாடுகளால் பல தரப்பினராலும் பாராட்டுகளை பெற்றவர் ஆவார். கடந்த 2015-ல் சென்னையை பெருவெள்ளம் தாக்கியபோது களத்தில் இறங்கிய அமுதா ஐ.ஏ.எஸ். பல்வேறு பகுதிகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்றினார். சென்னையின் புறநகர் பகுதிகளான முடிச்சூர், மணிமங்கலம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமுதா ஐ.ஏ.எஸ். மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம் 2015-ல் வெள்ள பாதிப்பு சரிசெய்யப்பட்டது.

மேலும் அப்போது, முடிச்சூர் அருகே நீர்வழிப் பாதைகளை நேரடியாக ஆய்வு செய்த அமுதா, அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து தள்ள அதிரடியாக உத்தரவிட்டார். அப்போது அமுதாவின் பணிகள் வெகுவாக பாரட்டப்பட்டது. அதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட அமுதா, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இறுதி நிகழ்வை முடித்துக்கொடுத்தார். இதனால் உடன்பிறப்புகளுக்கும் அவர் மீது பாசம் அதிகம்.

இந்தநிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அமுதா ஐ.ஏ.எஸ். மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். பிரதமர் அலுவலக பணிகளை மேற்கொண்ட அவரை, தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்ததும், மாநில பதவிக்கு அனுப்பிவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு அரசின் கோரிக்கயை ஏற்று அமுதாவை மாநிலப் பணிக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த மூன்று நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்குகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை பார்வையிட்டு, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். இந்தநிலையில் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில், அமுதா ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு  மாவட்ட மழை வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று காலையில் தமக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலையிலேயே களமிறங்கிய அமுதா, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டர். அப்போது, முக்கிய சாலைகள், குடியிருப்புகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு அமுதா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அடையாற்றின் தொடக்க இடமான ஜீரோ பாயிண்ட் மற்றும், ஆதனூர் முதல் மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் என அடையாற்றின் கரையோர பகுதிகளில் அமுதா ஆய்வுகள் மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர், மிக அதிக அளவில் தற்போது மழை பெய்துவருகிறது. பெரு மழைக்கு பின்னர் அடையாறு துவக்க இடம் முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தடுப்பு அனைகள், கல்வெட்டுகள் பாலங்கள் கட்டப்பட்டு முறையாக வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை முறையாக பராமரிப்பு செய்தால் தற்போது பெய்யும் மழையை சமாளிக்கலாம். மேலும் ஆடையாறு கரையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் முழுமையாக அகற்றப்படும் என்றும் அமுதா ஊறுதியளித்துள்ளார்.

click me!