உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த குடும்பம்... 5 பேரை துணிச்சலாக ஒற்றை ஆளாக காப்பாற்றிய இளைஞர்..!

By Thiraviaraj RMFirst Published Nov 9, 2021, 1:18 PM IST
Highlights

ஒரு குடும்பமே உயிருக்குப்போராடிக் கொண்டிருக்க, துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமாக கருதி ஒற்றை ஆளாக 5 உயிர்களை காப்பாற்றி இருக்கும் அந்த இளைஞனை தமிழகமே பாராட்டி வருகிறது.  

மனிதாபிமானம் மறித்துப்போகவில்லை என்பதற்கு இந்த இளைஞர் ஓர் சிறந்த உதாரணம். ஒரு குடும்பமே உயிருக்குப்போராடிக் கொண்டிருக்க, துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமாக கருதி ஒற்றை ஆளாக 5 உயிர்களை காப்பாற்றி இருக்கும் அந்த இளைஞனை தமிழகமே பாராட்டி வருகிறது.  

லாடனேந்தல் -திருப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரை நோக்கிசென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஓடைக்குள் புகுந்தது.பின்னால் வந்த வாகனத்தில் இருந்த திருப்புவனம் சேர்ந்த V. முத்து என்பவர் ஓடையில் குதித்து அந்த வாகனத்தில் இருந்த... pic.twitter.com/Czxd1F4YsX

— Rajalakshmi (@Raji_buji)

 

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே ஆற்று கால்வாய் தண்ணீருக்குள் காருடன் விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் காப்பாற்றிய ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். வைகை ஆற்றில் இருந்து மாரநாடு கண்மாய்க்கு மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையை ஒட்டி கால்வாய் செல்கிறது. தற்போது இந்த கால்வாயில் ஆற்றுநீர் சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மானாமதுரை பகுதியில் வசிக்கும் கணவர், மனைவி, 2 குழந்தைகள், ஒரு முதியவர் என 5 பேர் காரில் மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது திருப்புவனம் அடுத்த இந்திரா நகர் (லாடனேந்தல்) பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாரநாடு கால்வாய்க்குள் விழுந்தது. கால்வாய் 6 அடி ஆழம் இருந்ததாலும், தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் அவர்கள் காரிலேயே சுமார் ஒரு மணி நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்தனர். 

அந்த நேரம் அதே வழியாக திருப்புவனம், வடகரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் (29) காரில் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது கால்வாயில் கார் கவிழ்ந்து கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர் இறங்கி பார்த்தபோது, காருக்குள் 5 பேர் சிக்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முத்துக் கிருஷ்ணன் துணிச்சலாக கால்வாயில் நீந்தி சென்று காருக்குள் தவித்துக் கொண்டிருந்த 5 பேரையும் ஒற்றை ஆளாக காப்பாற்றினார். முத்துக்கிருஷ்ணனின் இந்தச் செயலை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து முத்துக்கிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் பலரும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் முத்துக்கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

click me!