
சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள "சென்னை சில்க்ஸ்” துணிக் கடையில் இன்று அதிகாலையில் காலைஏற்பட்ட தீவிபத்தின் போது 7 மாடியில் மாட்டிக் கொண்ட ஊழியர்கள் 11-பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இன்று அதிகாலை காலை 4.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மற்ற தளங்களுக்கும் புகை மூட்டம் பரவியது. பின்னர், தேனாம்பேட்டை, அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புகையை கட்டுப்படுத்த ரசாயன கலவைகள் பயன்படுத்தப்பட்டன.
தீ விபத்தில் ஏற்பட்ட புகை அனைத்து மாடிகளுக்கும் பரவியது. இதில் 7வது மாடியில் சிக்கியிருந்த 11 ஊழியர்களை ராட்சத ஏணி கொண்டு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தீயணைப்புத் துறை 'லேடர்' மூலமாக கடைகளின் உள்ளே இருந்து ஆட்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிபத்து பற்றிய காரணம் பற்றி விசாரிக்கையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, புகையை வெளியேற்றும் பணி தொடர்ந்து வருவதாகவும், மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை வேளையில் அடுத்தடுத்து கடைகளில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஏராளாமான பொருட்கள் எரிந்து நாசமாகின. கட்டடம் உள்ளே இருந்தும் அங்கங்கே புகை மண்டலமாக வெளியே வருகிறது. கட்டிடத்திற்குள் புகை சூழ்ந்துள்ளதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலாத சூழல் நிலவுகிறது. மேலும் தொடர்ந்து தீயை அணைக்க போராடிவருகின்றனர்.
இன்று அதிகாலை முதலே தீ பற்றி எரிந்து புகை வெளியேறுவதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.