
பெரம்பலூர்
பெரம்பலூரில் ஐம்பது வருடங்களுக்கு பிறகு கைலாசநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றதில் கூட்டம் கூட்டமாக அடியார்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் உள்ளது புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில். இந்தக் கோவிலில் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு தெப்ப உற்சவம் நேற்று நடைப்பெற்றது.
இதனையொட்டி காலை 9 மணிக்கு கணபதி ஓமம், 12 மணிக்கு சாமி புறப்பாடு, மதியம் 3 மணிக்கு கோவில் அருகே உள்ள சித்தேரியில் நூற்றுக்கணக்கான பேரல்களை கொண்டு மிதவை செய்து அதன்மேல் தெப்பம் வைக்கப்பட்டு நீரில் மிதந்து கொண்டிருந்தது.
இந்தத் தெப்பத்தில் காமாட்சி அம்மன் உடன் கைலாசநாதர் எழுந்தருளி அடியார்களுக்கு காட்சியளித்தார். அடியார்கள் அனைவரும் கரையில் நின்றபடி ஏரிக்குள் மிதந்துக் கொண்டிருந்த தெப்பத்தை வழிபட்டனர்.
பின்னர், தெப்பத்தில் இருந்தவர்கள் தோனி மூலம் அங்கிருந்து தெப்பத்தை நகர்த்திக் கொண்டுச் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை சென்றது. மேலும், புதிய வருட பிறப்பையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடும் நடந்தது.
பின்னர் இரவு 7 மணிக்கு சாமி திருவீதியுலாவும், 9 மணிக்கு ஊஞ்சல் சேவையுடன் விழா நிறைவும் பெற்றது.
இந்தத் தெப்ப உற்சவத்தில் அரும்பாவூர், மேட்டூர், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, தொண்டமாந்துறை, கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அடியார்கள் திரளானோர் பங்கேற்றனர்.