
நாமக்கல் மாவட்டத்தில் ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து அதிகாரிகள் 156 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை டாஸ்மாக் பார் நடத்துவதற்கான உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை மூலம் வசூலாகும் தொகையில் 3 சதவீத தொகையை பார் உரிமையாளர் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது டெண்டர் விதி. இதை எதிர்த்து 250-க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குபவர்களில் வெறும் 35 சதவீத பேர் மட்டுமே பாரில் மது அருந்துவதால், டாஸ்மாக் கடையின் விற்பனை அடிப்படையில் பார் நடத்துவதற்கான தொகையை நிர்ணயிக்க கூடாது. தமிழக அரசு அறிவித்த இந்த டெண்டர் விதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உரிம கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் அரசு கொள்கை முடிவுப்படி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து டெண்டரை பார் உரிமையாளர் புறக்கணித்த நிலையில் ஒப்பந்தகாலம் முடிவடைந்தது.
இந்நிலையில் நாமக்கல்லில் ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து அதிகாரிகள் 156 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் டெண்டர் மூலம் எடுக்கப்பட்ட 9 பார்கள் மட்டுமே தற்போது செயல்படுகிறது.