5 லிட்டர் பெட்ரோலை அடுத்து சிலிண்டர் பரிசளிப்பு... அதகளம் பண்ணும் கடலூர் இளைஞர்கள்!

By manimegalai aFirst Published Sep 23, 2018, 5:37 PM IST
Highlights

திருமண விழாவில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசளித்த நிலையில், எரிவாயு சிலிண்டர் அளிக்கப்பட்ட நிகழ்வு கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
 

திருமண விழாவில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசளித்த நிலையில், எரிவாயு சிலிண்டர் அளிக்கப்பட்ட நிகழ்வு கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.58-க்கும், டீசல் ரூ.78.10-க்கும் விற்பனை 
செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த திருமண விழாவின்போது, மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் வழங்கினர். 
பெட்ரோல் விலை உயர்வு குறித்து விழிப்புணர்வுக்காக இது கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமக்களுக்கு சிலிண்டர் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது. 

விருத்தாசலம் அண்ணாநகரை சேர்ந்தவர் பரமசிவம் - செல்வராணி தம்பதியினர். இவர்களது மகன் செல்வக்குமார். இவர் டிப்ளமோ என்ஜினியரிங் படித்து விட்டு சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கஸ்தூரி என்ற பெண்ணுக்கும்  விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அப்போது மணமக்களுக்கு, இளைஞர்கள் சிலர் வித்தியாசமான பரிசு ஒன்றை அளித்துள்ளனர். பெட்ரேல் - டீசல் - எரிவாயு விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, மணமக்களுக்கு அவர்கள் சிலிண்டர் ஒன்றை பரிசளித்துள்ளனர்.

இது குறித்து சிலிண்டர் அன்பளிப்பு அளித்தவர்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து விட்டது. தற்போது எரிவாயு விலையும் வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டது. சராசரி நடுத்தர வர்கத்தினர் கூட சிலிண்டரை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் புதிதாக திருமணமானவர்கள் விலையேற்றத்தைக் கண்டு கவலை அடைந்து விடக் கூடாது என்பதற்காக சிலிண்டரை பரிசளித்ததாக கூறினர்.

இந்த நிலையில், வேலூரில் உள்ள பேக்கரி ஒன்றில் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்தவர்கள் இது வியாபார யுக்தியா? அல்லது பெட்ரோல் விலை உயர்வு குறித்த விழிப்புணர்வா? என்றபடி சென்றனர்.

click me!