மாற்றுத் திறனாளி மகனை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற தந்தை; வேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை...

First Published Jul 7, 2018, 11:37 AM IST
Highlights
father killed son put in water tank and Suicide


விருதுநகர்

விருதுநகரில் மாற்றுத் திறனாளி மகனை தண்ணீர் தொட்டியில் தூக்கிப்போட்டு கொன்ற தந்தை, தனது மகனை தானே கொன்றுவிட்டோமே என்ற வேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், பாண்டியன்நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (53). தச்சுபட்டறை நடத்தி வந்த இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் செல்வேந்திரன் (27), சுரேஷ் கண்ணன் (25), ராகுல் (21) என்ற மகன்களும் இருக்கின்றனர். இதில் ராகுலை தவிர மற்ற இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.

ராகுல் கை, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். மேலும், அவரால் பேசவும் முடியாது. இவரை முருகன் மிகுந்த பாசத்துடன் பராமரித்து வந்தார். 

நாள்தோறும் இரவு தூங்கும்போது மகனை தனது அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வாராம். ராகுலின் நிலை கண்டு முருகன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தனது அருகில் படுத்து தூங்கிகொண்டிருந்த ராகுலை, தூக்கி சென்ற முருகன், வீட்டின் முன்புறம் இருந்த 7 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டார். அதில் ராகுல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

பாசமுடன் வளர்த்த மகனை கொன்றுவிட்ட வேதனையில், முருகன் வீட்டில் உள்ள அறையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காலையில் கண்விழித்த பாக்கியலட்சுமி கணவரும், மகன் ராகுலும் படுத்திருந்த இடத்தில் இல்லாததால் பக்கத்து அறைக்கு சென்று பார்த்தார். அங்கு முருகன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மகனை தேடி பதற்றத்துடன் வெளியே வந்து பார்த்தபோது, தண்ணீர் தொட்டியில் ராகுலின் உடல் மிதந்து கொண்டு இருப்பதை கண்டு துடி, துடித்தார். 

பின்னர், இது பற்றி பாண்டியன்நகர் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தந்தை, மகன் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குபதிந்த காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!