
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதைக் கண்டித்து விவசாயிகள். வங்கிக்கு பூட்டுப் போட முயன்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கிக் கிளையில் சில விவசாயிகள் அடகு வைத்த நகைகள் காலக்கெடு முடிந்ததால் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நகைகளை ஏலம் விடக்கூடாது என்று கோரியும், ஏலம் விடுவதை கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வங்கிக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலர் தினேஷ் தலைமை தாங்கினார். வங்கி முன் விவசாயிகள் திரளாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கையில் பூட்டுடன் வங்கி நோக்கிச் சென்றனர்.
அப்போது, வங்கி முன் பாதுகாப்புக்காக நின்றிருந்த வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன் தலைமையிலான தேசூர் காவலாளர்கள், விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.
அவர்களை தாண்டி உள்ளே செல்ல முற்பட்டத்தால் 28 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் தேசூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.