
இலுப்பூர்
இலுப்பூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக பலியானார். மேலும் உடனிருந்த பள்ளி மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மாரப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சிலம்பன் (56). விவசாயியான இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கருத்த ஊரணி என்ற பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.
அதன் அருகே அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (9) என்ற பள்ளி மாணவன் ஆடு மேய்த்து கொண்டிருந்தான்.
அப்போது மின்னல் தாக்கியதில் சிலம்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவன் சௌந்தர் பலத்த காயம் அடைந்தான்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சௌந்தரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து இலுப்பூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சிலம்பனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் இந்தப் பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது.