உடலில் சேறும், சகதியையும் பூசி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு;

 
Published : Mar 14, 2017, 08:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
உடலில் சேறும், சகதியையும் பூசி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு;

சுருக்கம்

Body mud mire upon the hydrocarbon resistance program

வடகாடு

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று வடகாட்டில் தினமும் வித்தியாச வித்தியாசமாக நூதன போராட்டத்தில் மக்கள் எழுச்சி குறையாமல் போராட்டம் நடைப்பெற்று வருகிறது..

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு பிப்ரவரி 15–ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு மரத்தடியில் அப்பகுதியினர் கடந்த மாதம் 16–ஆம் தேதி தங்களது அறப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

கடந்த 9–ஆம் தேதி போராட்டக் குழுவினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்திய பின் நெடுவாசலில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு எதிராக நல்லாண்டார் கொல்லையிலும், வடகாட்டிலும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இரண்டு இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வித்தியாசமாக அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் வடகாட்டில் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று 9–வது நாளாக போராட்டம் நீடித்தது. வடகாடு மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் மா, பலா, வாழை, நிலக்கடலை, பப்பாளி இலை, மிளகு செடி உள்பட தாங்கள் விளைவித்த விளைபொருட்களுடன் கையில் கருப்பு கொடியை ஏந்தியபடி வடகாடு ஊரின் எல்லைப்பகுதியில் இருந்து ஊர்வலமாக போராட்ட களத்திற்கு வந்தனர்.

மேலும் ஊர்வலத்தின் போது திட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டக் களத்தில் சிறுவவர்கள் பலர் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். வடாகாட்டில் போராட்ட களத்திற்கு தினமும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மக்களின் எழுச்சி குறையவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தங்கள் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை மூடவேண்டும், தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இதேபோல நல்லாண்டார் கொல்லையிலும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 26–வது நாளாக போராட்டம் நடந்தது.

போராட்டகளத்திற்கு ஆடு, மாடுகளை அழைத்து வந்து பந்தல் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றில் இரும்பு குழாய் அருகே இளைஞர்கள் பலர் உடலில் சேறும், சகதியையும் பூசி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் பலர் கலந்து கொண்டும் திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு