
பந்தலூர்
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோட்டமலை பகுதியில் கடந்த 6-ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
மேலும் அதன் வாயில் உள்ள தாடை பகுதியில் பலத்த காயங்கள் இருந்ததால் உணவு, நீர் அருந்த முடியாமல் அவதியடைந்தது. அந்த யானையால் நகர முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாய் இருந்தது.
இந்த நிலையில் அந்தக் காட்டு யானையின் உடல் நலம் ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் பாதிக்கப்பட்டதால் கண்ணம்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி அருகே தனியார் தேயிலை தோட்டத்தின் அருகே படுத்துக் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் (பொறுப்பு) மனோகரன், வன காப்பாளர்கள் ராபர்ட் வில்சன், பிரகாஷ், ராமச்சந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானைக்கு தீவிரமாக சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.
பின்னர் முதுமலை கால்நடை மருத்துவர் விஜயராகவன், சேரம்பாடி கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு நடத்தப்பட்டது.
பின்னர் அந்த யானையின் உடல் அப்பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
“கோவிலில் இருக்கும் யானைகளுக்கு ஒரு மாதம் புத்துணர்வு முகாம் என்ற பெயரில் சந்தோசமாக இருக்கவும், அனைத்துவித பரிசோதனைகளையும் நடத்துகிறது அரசு. ஆனால், காட்டில் சுற்றித் திரியும் யானைகள் வறட்சி காலத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. அவை சுற்றித் திரியும் இடங்களை வளைத்துப் போட்டு யோகா மையம் போன்றவற்றை கட்டி அவற்றின் சுதந்திரத்தை பறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பின்னர், அந்த யானைகள் ஊருக்குள் வந்துவிட்டால் விரட்டுவதற்கு பட்டாசு, மயக்க ஊசி என்று வீண் செலவு வேறு. காட்டு யானைகள் செல்லும் பாதையில் குறுக்கிடமால் இருந்தால் போதும். அவை இயற்கையே காப்பாற்றும். அவற்றை இயற்கை காப்பாற்றும்” என்று மக்கள் தெரிவித்தனர்.